இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி மியான்மரைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், நேற்று ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகள், இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் பாய்மரப்படகு ஒன்று நிற்பதை கண்டு சந்தேகித்து விசாரணை நடத்தினர்.
அது மியான்மர் நாட்டு மீன்பிடி படகு என்பதும், அவர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இருப்பதையும் தெரிந்து கொண்ட இந்திய கடற்படையினர், அந்த படகில் இருந்த மீனவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், நாகை மாவட்ட கடலோர குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நாகை கடலோர காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான நான்கு மீனவர்களும் பர்மிஷ் மொழி மட்டுமே பேசுவதால், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“