சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலை மீது மர்மநபர்கள் சிவப்பு பெயிண்ட் ஊற்றி அவமதித்துள்ளனர்.
இதற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்தத் தலைவருமான டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் தன் கைப்பட எம்.ஜி.ஆர். சிலையை சுத்தப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய உண்மை நபர்களை கைது செய்யவில்லை என்றால் பெரிய போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.
மேலும்,“அதிமுகவை எதிர்க்க திராணியற்ற மொள்ளமாரிகள், பிற்போக்குவாதிகள், பேடிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அவரின் அழகிய திருமுகத்தில் பெயிண்ட் தெளிக்கப்பட்டுள்ளது. இது மனதை சங்கடமாக்குகிறது. அதிமுக தொண்டர்கள் அத்தனை பேருக்கும் இது வேதனை அளிக்கிறது.
இதைப் பார்த்து நானே அதிர்ச்சி அடைந்தேன். காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
டிடிவி தினகரன் கண்டனம்
எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. புரட்சித்தலைவரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களையும் அவமதிப்பதாகும்.
ஏழைகளின் காவலர் பொன்மனச்செம்மலின் சிலையை அவமதித்த நபர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் சிலையில் மர்ம நபர்கள் பூசிய பெயிண்ட்டை அகற்றி புதுப்பிக்கவும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“