தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. விரைவில் சிவ்தாஸ் மீனா ஓய்வு பெற உள்ளது மற்றும் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கியதன் மூலம் புதிய தலைமை செயலாளர் யார்? என்கிற கேள்வி எழுந்திருந்தது.
இந்த நிலையில், புதிய தலைமை செயலாளர் தொடர்பான அறிவிப்பு இன்று திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலராக முதல்வரின் செயலர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியான முருகானந்தம் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர் 1991 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். அவர் கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக இவர் பொறுப்பு வகித்தார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுவாக நிதித்துறையில் அதிக அனுபவம் கொண்டவர்கள் தான் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால், நிதித்துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஸை முதல்வர் ஸ்டாலின் அந்த பொறுப்பில் நியமனம் செய்தார்.
இது முருகானந்தம் மீது முதல்வர் ஸ்டாலின் வைத்த நம்பிக்கையை காட்டியது. அதனை முருகானந்தம் காப்பாற்றினார். அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் பாராட்டை பெற்று அவருக்கு நெருக்கமானவராக மாறினார். தற்போது கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலர் 1 ஆக பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.