கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இவருக்கு வயது 102.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறை ஏற்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்தனர். மேலும் சிகிச்சை தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டனர்.
சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில், சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மரணமடைந்தார். இன்று மதியம் இவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மேலும் இவர் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சமீபத்தில் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்தது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“