சீமான் கைது செய்யப்பட்டபோது, போலீஸாரை பெண்கள் தடுத்து கதறினார்கள். எங்களிடம் குறை கேட்க வந்தது குற்றமா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சீமான் இன்று நாம் தமிழர் கட்சியினருடன் சேலம் அருகே பாரப்பட்டி பகுதியில் மக்கள் குறை கேட்டார். குறிப்பாக சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து பேசினார் அவர்.
சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஏற்கனவே சீமான் மீது ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதில் முன் ஜாமீன் பெற்று தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடும் நிலையில் சீமான் இருந்தார்.
இந்த நிலையில்தான் சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக மக்களிடம் அவர் கருத்து கேட்க கிளம்பியதும் அரசு தரப்பு கோபம் அடைந்ததாக தெரிகிறது. சேலத்தை அடுத்த பாரப்பட்டி அருகே பூவாங்காடு பகுதியில் இன்று (ஜூலை 18) பகல் 11 மணியளவில் பொதுமக்களுடன் சீமான் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த போலீஸார், ‘உங்களுடன் கொஞ்சம் பேசணும். வாங்க’ என்றார்கள். அப்போதே நிலைமையை சீமான் உணர்ந்து கொண்டார். ‘நான் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். மக்களை சந்தித்து அவங்க கருத்தைக் கேட்பதும் தவறா?’ என கேள்வி எழுப்பினார் சீமான்.
அதற்கு போலீஸார், ‘கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க’ எனக் கேட்டனர். உடனே அருகில் இருந்த பெண்கள், ‘எங்களிடம் குறை கேட்க வருகிறவர்களைக்கூட அரெஸ்ட் பண்றது என்ன நியாயம்?’ என கேள்வி எழுப்பினார்கள். மீண்டும் போலீஸார், ‘கோ ஆப்ரேட் பண்ணுங்க. எங்க கடமையை செய்யணும்’ என்றனர்.
அப்போது சீமான், ‘நீங்க எங்களுக்கு கோ ஆப்ரேட் பண்ணுங்க. நீங்க போங்க. நான் வருகிறேன். சொன்னா வருவேன்’ என உறுதி கொடுத்தார். அதன் பிறகு அங்கிருந்து எழுந்து செல்ல முயன்ற சீமானை தடுத்து சில பெண்கள் கதறினர்.
‘எங்களுக்கு ஆதரவா வருகிற எல்லோரையும் கைது செய்து எங்களை தனிப்படுத்துகிறது அரசு. விவசாயிகளுக்கு ஆதரவா யாரும் வரக்கூடாதா?’ என கேட்டு கண்ணீர் வடித்தார்கள் அந்தப் பெண்கள்! அந்தப் பெண்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சீமான் கிளம்பினார்.
சீமான் கைது: சேலம்-சென்னை 8 வழிச்சாலை மக்கள் சந்திப்பு எதிரொலி To Read, Click Here
சீமானுடன் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களை மல்லூர் வெங்கடேஸ்வரா மண்டபத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை போராடத் தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக தெரிகிறது.
சீமானை இன்று மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.