Advertisment

வேட்பு மனு தாக்கல் செய்ய வாகன பேரணியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: போலீசாரால் தடுத்து நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர் சுயேட்சைகள் என தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர் சுயேட்சைகள் என தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் கோவையில் இன்று அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisment

அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன்  அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக  மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து  ஊர்வலமாக வந்து வேட்பமான தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி காளப்பட்டியில்  இருந்து வாகன பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு  மனு தாக்கல் செய்ய உள்ளார் இதற்காக நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.இதனையடுத்து அவர்கள் அனைவரும் காளப்பட்டி நால் ரோட்டில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி வாகன பேரணியாக செல்லக்கூடாது என கூறியதால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேர வாக்கு வாதத்திற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

 பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மீண்டும் நேரு நகர் பகுதியில் போலீசாரால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வாகனம் மற்றும் உடன் வந்தவர்களின் வாகனங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாகனங்களாக அனுப்பி வைக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாம் தமிழர் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி கலாமணி ஜெகநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 'நாளை முதல் எங்களது தேர்தல் பிரச்சாரங்களை துவங்க உள்ளோம். காலையில் வேட்பு மனு தாக்கலுக்காக வாகனங்களில் ஊர்வலமாக வரும் போது காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

மற்ற கட்சிகள் வரும்போது போலீசார் இப்படி தடுப்பதில்லை. குறிப்பாக மோடி கோவை வந்தபோது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாங்கள் ஓரமாக பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வந்து கொண்டிருந்தோம், போலீசார் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்தினர். 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு போலீசார் தான் காரணம். நாளை பாஜகவின் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய இப்படி வரும்போதும் போலீசார் இப்படித்தான் நடவடிக்கை எடுப்பார்களா என பார்க்கலாம். மற்ற கட்சிகள் என்ன செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, தமிழகத்தின் மூன்றாவது கட்சியான நாம் தமிழர் கட்சி ஊர்வலத்திற்கும் கூட்டத்திற்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறைக்காகவும் பொது மக்களுக்காகவும் தான் நாங்கள் போராடுகிறோம். அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் உரிமைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் உரிமைகளை போராடி வாங்கி வருகிறோம். என்.ஐ.ஏ சோதனை, சின்னம் வழங்காதது இவை அனைத்துமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். மக்களுக்கு இது தெரியும்' என தெரிவித்தார்.

 

கட்சி சின்னம் பெறுவதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத நீங்கள் மக்கள் பிரச்சனைக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சிறிய தடுமாற்றத்திற்கு பின்னர் பதில் அளித்தவர், சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்பு மனு தாக்கல் செய்து, எந்த சின்னத்தையும் இந்தியா முழுவதும் பரப்பும் அளவிற்கு எங்களது ஐடி பிரிவு உள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார், ஒரு அரசியல் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இரண்டு நாட்களில் எங்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். அதுவரை மற்ற யுத்திகளில் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். சின்னம் கிடைத்தவுடன் மக்களிடம் கொண்டு செல்வதற்கு எங்களது ஐடி பிரிவின் மூலம் வேலை செய்வோம்.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் மாநில சுய உரிமைகளை இழந்துள்ளோம், அதிக அடக்குமுறைகள், மதப் பிரச்சினைகள் நடந்துள்ளது. மக்களை மத ரீதியாக பிரித்து ஆளக்கூடிய சூழ்ச்சி பத்தாண்டுகளாக உள்ளது. அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்கள் தான் இருந்தது.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலை நிறுத்த எந்த கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிட்டு உறுதியாக நிற்கிறோம்' என்றார். 150 வாகனத்திற்கும் அனுமதி காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த கலாமணி, ஊர்வலத்திற்கு அனுமதி உண்டு என கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பதில்லை. இதே கேள்வியை மற்ற கட்சிகளிடம் கேளுங்கள். பாஜக, அதிமுக யார் வந்தாலும் எதுவும் கேட்பதில்லை. பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம் தேர்தல் பத்திரம் குறித்து கேள்வி கேளுங்கள் என காட்டமாக பேசினார்.

மேலும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவையின் சிறு குறு தொழில்கள் முடங்கியதற்கு காரணம் ஜிஎஸ்டியும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் தான். இங்கு பெரும்பாலும் வட தமிழர்கள் வேலையில் உள்ளனர். தமிழர்களுக்கு வேலையில்லை.

படித்த பட்டதாரிகளுக்கு இங்கு வேலை வாய்ப்பில்லை. இவற்றையெல்லாம் சரி செய்யும் முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். மற்ற கட்சிகளைப் போல பொய்யான வாக்குறுதிகள் நாங்கள் கொடுப்பதில்லை. அதிகாரம் கிடைத்ததும் அனைத்து மக்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். அதை எங்களது செயலில் நீங்கள் பார்ப்பீர்கள் எனவும்,

பெண் வேட்பாளராக இருக்கும் சவால்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,'பிரபாகரன் பிள்ளைகளாகிய எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என நாங்கள் கருதுகிறோம். அதனால் 20 தொகுதியில் ஆண்களும் 20 தொகுதிகள் பெண் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment