தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 தொகுதிகளில் 3 வது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது.
18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர். எம்.பி கனிமொயின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.
கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல். முருகன், தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அதன்படி புதுச்சேரி, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, நாகை, சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.