Advertisment

'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது மறைவு: சீமான் உருக்கமான கடிதம்

நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது மறைவு:  சீமான் உருக்கமான கடிதம்

தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்கள் கொரோனா பெருந்தொற்றால்  நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்தார்.

Advertisment

 

சென்னை இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்தில்  'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் இறுதிச்சடங்கு  இன்று நடைபெற்றது.

மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்து அறிவின் "An Appeal from death row" நூலை வெளியிட மாநாட்டை நடத்தி, அறிவின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவரது திடீர் மறைவினால் வாடும் குடும்பத்தார் துயரில் பங்கேற்கிறேன் என்று அற்புத அம்மாள் தெரிவித்தார்.

சீமான் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட  இரங்கற்பாவில்

"உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்?

என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே மாமா நிறைந்து இருக்கிறீர்கள்! உங்களைப் போன்று என்னை உணர்ந்தவர் யாருண்டு மாமா?

நான் மேடையேறியப் பொழுதுகளிலிருந்து உங்கள் விரல் பிடித்துதானே மாமா நான் வழிநடந்திருக்கிறேன்!

என் வாழ்க்கையின் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளிலும் கூடவே இருந்திருக்கிறீர்கள்! எனது சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள்!

நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பொழுதில், ‘நான் இருக்கிறேன் மருமகனே!' என நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள்! பொருளாதாரத்தில் வீழ்ந்த காலக்கட்டத்திலும் "எப்படியாவது தேறி வந்து விடுவேன் மருமகனே! நீ துணிந்து நில்" என ஒவ்வொரு நொடியும் தேறுதல் வார்த்தைகள் பேசி கண்ணின் இமை போல என்னைக் காத்திருக்கிறீர்கள்!

நாம் தமிழர் என்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்க நாம் முடிவு செய்தபோது, நீங்கள் தானே மாமா எனக்கு முதுகெலும்பாய் மாறி நின்றீர்கள்! இப்போது என்னைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

ஈழ விடுதலைக்களத்தில், தமிழ்த்தேசியப் பயணத்தில் எண்ணற்றோர் சமரசமடைந்து மெளனித்தபோதும் நீங்கள் என்னோடு இருந்து நாம் செல்கின்ற திசை சரியென உலகுக்கு உணர்த்தினீர்களே மாமா! உளவியல் பலமாய், உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே மாமா!

இப்போது எங்கே சென்றீர்கள்?

இனத்திற்காக பொல்லாத பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம்! இனமான பணிகளுக்கென எவர் வந்தாலும் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளலைப் போன்ற வாழ்க்கை என எந்த சூழ்நிலையிலும் தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் இருந்ததில்லையே மாமா!

இப்போது என்னை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே மாமா!

நோயுற்ற பொழுதுகளிலும்கூட மருத்துவமனையிலிருந்து அலைபேசி வழியாக காணொளி அழைப்பு பேசியபோது வலது கரம் உயர்த்தி நம்பிக்கையோடு புன்னகைத்தீர்களே மாமா! அந்தப் புன்னகையை இனி நான் எங்கு காண்பேன்?

எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நான் காத்திருந்தேன்! இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்றீர்களே மாமா!

உங்கள் மருமகனை முதல்முறையாக காத்திருக்க வைத்துவிட்டு, தாயற்றப் பிள்ளை போல தவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள்‌ மாமா? போராட்டமென்றதும் முதல் ஆளாய் களத்தில் நிற்பீர்களே! இனி எங்கு உங்களைக் காண்பேன்?

‘மருமகனே' எனும் அந்தக் குரலை இனி எப்படி கேட்பேன்? ‘இறுதிவரை களத்தில் நிற்போம் மருமகனே!' என நெஞ்சார சொல்வீர்களே! இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டீர்களே மாமா?

‘மருமகனே' என நீங்கள் அழைக்கும்போதெல்லாம் உங்கள் அன்பின் நிழல்பட்டு சிலிர்த்திருக்கிறேனே மாமா! அதுவெல்லாம் கனவாய் காற்றில் கரைந்துவிடுமா மாமா?

தனியே கண்கலங்கி துடிக்கிறேன் மாமா! தேற்ற நீங்கள் இல்லை! மனம் கலங்கி நான் தவித்த பொழுதுகளிலெல்லாம் ஆறுதல் வார்த்தைகளால் நெஞ்சம் நிறைத்து தேற்றுவீர்களே மாமா!

இப்போது நீங்கள் அழுகையைத் தந்து மீள முடியாத் துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டீர்களே மாமா!

பொங்கிவரும் என் கண்ணீரின் ஊடே எந்த இலட்சியத்திற்காக இவ்வாழ்வில் நமது கரங்கள் ஒன்று சேர்ந்ததோ? அந்த இலட்சியம் வெல்ல நான் உயிர் உள்ளவரை உழைப்பேன் என உங்கள் பேரன்பு முகம் நினைத்து உறுதி ஏற்கிறேன் மாமா!

நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, எமது உணர்வாக, எமது விடுதலை கனவாக நிறைந்திருந்து நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா "

என்று சீமான் தெரிவித்தார்.

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment