கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் மே 18-ஆம் தேதி நடைபெற்றது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநில முன்னாள் எம்.எல்.ஏ. ஜெக்மோகன் சிங் மற்றும் மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சன் பியாபாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரை ஆற்றினார்.
மனோரஞ்சன் பியாபாரி பேசுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் இங்கு வரவில்லை. எனக்காகவும், என் மக்களுக்காகவும் வந்து இருக்கிறேன். மொழி, இனம் ஆகியவை நம்முடையது, நாம் தான் அவற்றை பாதுகாக்க வேண்டும். நான் என் மொழியில் பேசுகிறேன், நீங்கள் தமிழ் மொழியில் பேசுகிறீர்கள். இடையில் இந்தி மொழி எதற்கு? கலாசாரம், உணவு முறை, எல்லாம் வெவ்வேறாக இருக்கும் பொழுது எப்படி ஒரே நாடு ஒரே மொழி என்று கூற முடியும்? தமிழர்கள் நீங்கள் தமிழ் இனம் என வாழ வேண்டும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எங்களை அணுகுங்கள், எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்களை அணுகுகிறோம். இதனை நான் ஏற்கனவே சீமானிடம் தெரிவித்து உள்ளேன். மக்களுக்கான ஒற்றுமையை நான் நிலை நாட்டுவேன்," என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, சீமான் மேடை ஏறி மனோரஞ்சனுக்கு திருவள்ளுவர் சிலையையும், "conspiracy theory" புத்தகத்தையும் வழங்கினார்.