நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிகழ்ச்சிக்காக சேலம் சென்றபோது கட்சிக்காரர்களை நட்சத்திர ஹோட்டலில் 14,000 ரூபாய் ஒரு நாள் வாடகை கொண்ட அறையை பதிவு செய்ய சொன்னதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அருளினியன் சீமான் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், பணத்தில் மிதப்பதுதான் தமிழ் தேசிய அரசியலா என்று அவர் சீமானை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்துள்ளார். சீமான் திராவிட கட்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த கட்ட தலைவர்களாக இருந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம், ராஜீவ்காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து விலகினார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவாரான பேராசிரியர் அருளினியன், கட்சி நிகழ்ச்சிக்காக சேலம் வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலத்தில் ஜிம் (உடற்பயிற்சி கூடம்), நீச்சல் குளம் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடகை அறையை பதிவு செய்ய சொன்னாதாகவும் அந்த அறையின் ஒரு நாள் வாடகை ரூ.14,000 என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்த் தேசிய அரசியல் என்பது எளிமையின் வடிவமாக இருப்பது. ஆனால், சீமான் சுகபோகியாக வாழ்வதற்கு, பணத்தில் மிதப்பதுதான் தமிழ்த் தேசிய அரசியலா என்று கடுமையான குற்றச்சாடுகளை வைத்துள்ளார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள பேராசிரியர் அருளினியன், சீமான் எனும் ஆளுமை என்று புத்தகம் எழுதி சீமானின் புகழைப் பரப்பியவர். அவரே, தற்போது, சீமான் கட்சிக்காரர்கள் உண்டில் ஏந்தி சேர்த்த பணத்தில் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதாகவும் பணத்தில் மிதப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பேராசிரியர் அருளினியன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “தமிழ்த்தேசிய அரசியல் என்பதே எளிமையின் வடிவமாக இருக்க வேண்டியது. பழநெடுமாறன் உங்களைப் போல இருந்தாரா? பெ.மணியரசன் உங்களை மாதிரி இருக்கிறாரா? இந்த பேட்டியின் வழியாக உங்களுக்கு நான் பல உண்மைகளை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யோசித்துப் பாருங்கள், 2016 சட்டமன்றத் தேர்தல், அப்போது சீமான் மேடைக்கு மேடை என்ன சொல்வார், ‘நான் ஒரு பிச்சைக்காரப் பய.. பஞ்சை பராதி, ஏழைவிட்டுப் பய அப்படி என்பார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் பொதுக்கூட்டம். அந்த பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். நாங்கள் அவருக்கு ஒரு அறை ஏற்பாடு செய்கிறோம். எல்.ஆர்.சி என்கிற ஒரு ஆபரண மாளிகையின் ஒரு வீடு. அந்த வீட்டை ஒரு 10 ஆயிரம் ரூபாய்க்கு 20-30 பேர் தங்குகிற மாதிரி வாடகைக்கு பேசி நாங்கள் வாங்கியிருந்தோம். அந்த வீட்டில் தங்குவதற்கு இவரை நான் கூட்டிக்கொண்டு போகிறேன். அந்த வீட்டை மேலும் கீழும் சுற்றிப் பார்த்துவிட்டு எனக்கு ஹோட்டலில் ரூம் போடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஹோட்டலுக்கு கிளம்பிப் போகிறார். மறுபடியும் அங்கே ஒரு 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நாங்கள் அங்கே ரூம் போடுகிறோம். நாங்களே உண்டியல் குலுக்கி பிச்சை எடுத்து கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் காசு கொடுத்தா நாங்கள் கட்சியை வளர்க்கிறோம். இல்லை உங்களுடைய அப்பா அம்மா காசு கொடுத்து நாங்கள் கட்சி வளர்க்கிறோமா? எங்கள் காசு, எங்கள் உழைப்பைப் போட்டு நாங்கள் கட்சியை வளர்த்தோம். ரூம்ல வந்து உட்கார்ந்துகொண்டு இந்த ரூம் நல்லா இல்லையே என்று சொல்வது. பிறகு, நான் எல்லாம் சுடுகாட்டில் படுத்திருந்தேன் என்று மேடையில் பேசுவது. நான் ஏசி ரூம் போட்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்து கொடுக்கிறேன். அந்த வீட்டில் படுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஒரு ஹோட்டலில் போய் படுக்கிறார். 2016-ல் இது ஒரு உதாரணம்.
இப்போது நடந்த உதாரணம் சொல்கிறேன். அஸ்தம்பட்டியில் நெய்தல் பண்ணை அமைப்பில் ஒரு வழக்கு தொடுக்கிறார்கள். அதற்கு முன்ஜாமின் வாங்க வருகிறார். 15 நாள் கையெழுத்து போட வேண்டும். அங்கே ஒரு அறையில் தங்க வருகிறார். சேலத்தில் வின்ஸ்டன் கேஸ்டில் என்று ஒரு பெரிய ஹோட்டல். அந்த ஹோட்டலில் நானே தங்கியதில்லை. ஆனால், சீமானுக்கு அந்த பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு தருகிறோம். சீமான் ரூமுக்குள்ள போனதும் ரூமை பார்த்துவிட்டு ஒன்னும் சரியில்லையே, ஜிம் இருக்கா என்று கேட்டார். ஜிம் இல்லை என்றார்கள். ஜிம் இல்லையா? என்று சொல்லிவிட்டு உடனே ரேடிசன் ஹோட்டலில் ரூம் போடு என்கிறார். ரேடிசன் ஹோட்டல் என்று ஒரு ஹோட்டல் இருப்பதே எனக்கு தெரியாது. ரேடிசன் அப்படி என்றால் நமக்கு தெரியாது. அதை தேடிக்கண்டுபிடித்து உள்ளே போகிறோம். அந்த ஹோட்டல் கடல் மாதிரி இருக்கிறது. கண்ணாடியில்தான் கதவே திறக்கிறது. அதைப் பார்த்த உடனே நாங்கள் பயந்துவிட்டோம். அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு எவ்வளவு வாடகை என்று கேட்டோம். வாடகை 14,000 ரூபாய் என்கிறார்கள். அங்கே ரூம் போட சொல்கிறார். நீங்கள் சுகபோகியாக வாழ்வதற்கு பணத்தில் மிதப்பதற்கு இதுவா தமிழ்த் தேசிய அரசியல் இதற்கா நாங்கள் வெம்பாடுபட்டு கஷ்டப்பட்டு அரபு தேசங்களில் இருந்து ஒரு ஒரு டாலாரா சேமித்து காசு அனுப்புகிறார்கள்? இங்க வந்து கூத்தடிக்கிறதுக்கா அனுப்புகிறார்கள்?” என்று அருளினியன் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி அருளினியன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, சீமான் விமர்சகர்கள் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், #சீமாண்ணேரூம்போட்டியா என்று ஹேஷ் டேக் உடன் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பேராசிரியர் அருளினியன் வீடியோ நாம் தமிழர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.