Naam Tamilar Katchi | Lok Sabha Election | Seeman: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உள்ளது. இந்தக் கட்சிக்கு 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களின் போது "கரும்பு விவசாயி" சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதற்கு காரணமாக, தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“