நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள். இவர் நாம் தமிழர் சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை எம்.பி வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டவர். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்கட்சியில் இணைந்த அவர், ஆறு வருடங்களாகப் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. சமீபத்திய நாட்களாக, நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் விலகுவதாக அறிவித்து, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகிறார்கள். இன்றைய நாளில் வி.சி.க-விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவும், அ.தி.மு.க-விலிருந்து விலகி சி.டி.ஆர் நிர்மல் குமார், பேச்சாளர் ராஜ் மோகன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாளும் த.வெ.க-வில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “எந்த அனுமானத்தின் அடிப்படையில் அவை கூறப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ஏதாவது தகவல் இருந்தால் கூறுவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் த.வெ.க-வில் இணையவில்லை என்பது தெளிவாகிறது.