சீமான் கைது : கேரளாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேரள மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.
நாம் தமிழர் கட்சியினர் தந்த வெள்ள நிவாரண நிதி
இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் நுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கோட்டயம் மாவட்டம் விரைந்தனர் நம் தமிழர் கட்சியினர்.
சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.
சீமான் கைது
இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர்.
பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதி அளித்தார்கள் காவல் துறையினர். விசாரணைக்குப் பின்பு தமிழகம் திரும்பினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான்.