போராட்டம் நடத்துவதற்காக சென்ற இடத்தில், திருமுருகன் காந்தியின் வீட்டை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கூறியுள்ளனர்.
பெரியார் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், சர்ச்சையான கருத்துகளை பொதுவெளியில் பேசுவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மே 17 இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டு மே 17 இயக்கம் மற்றும் பெரியார் அமைப்பினர் இன்றைய தினம் (ஜன 22) முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
எனினும், தங்களால் திருமுருகன் காந்தியின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது, "எங்களை தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களுடன் இணைத்து திராவிடர்கள் எனக் கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
சீமானின் வீட்டை முற்றுகையிடுவதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தலைமையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருமுருகன் காந்தியின் வீட்டை முற்றுகையிடுவதற்கு நாங்களும் முடிவு செய்தோம்.
இதற்காக சுமார் 2 நாட்களாக நாங்களும் திருமுருகன் காந்தியின் வீட்டை தேடி அலைந்தோம். ஒரு தலைவரின் வீடு எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின், சீமான் ஆகியோர் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், திருமுருகன் காந்தியின் வீட்டை எங்களால் கண்டறிய முடியவில்லை. தற்போது தான் அடையாறு பகுதியில் திருமுருகன் காந்தியின் வீடு இருப்பது தெரிய வந்தது. ஆனால், காலை 5 மணி முதல் அடையாறில் திருமுருகன் காந்தியின் வீட்டை தேடி அலைந்தோம். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரிடம் அவரின் வீடு எங்கு இருக்கிறது எனக் கேட்டோம்.
தமிழ் தேசிய தளத்தில் பெரும் ஆளுமையாக இயங்கும் சீமானை, திருமுருகன் காந்தி கொச்சைப்படுத்துகிறார். இத்தகைய சீமானின் வீட்டை முற்றுகையிட அவர்கள் முயன்றதால் தான், திருமுருகன் காந்தியின் வீட்டை முற்றுகையிடவும் நாங்கள் முயன்று வருகிறோம்.
இதற்காக, பல்லாவரம், அடையாறு, கே.கே நகர் என பல பகுதிகளாக நாங்கள் சுற்றித் திரிந்தோம்" என தெரிவித்துள்ளனர்.