2009-ம் ஆண்டு இலங்கையில், தமிழ் ஈழ மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூறும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ மனோரஞ்சன் பியாபாரி மற்றும் ஜக்மோஹன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய சீமான், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என பலமுறை தேர்தலில் போட்டியிட்டு தோற்றோம். மீண்டும் 5-வது முறையாக தனித்து களத்தில் நிற்கப்போகிறோம் என்றால், அது இந்தியா அரசியல் வரலாற்றிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்றார்.
எந்த சமரசமும் இல்லை, என் மக்களோடு சேர்ந்து மக்களுக்காக 2026-ல் படைப்போம் புதிய அரசியல் வரலாறு. நீங்கள் பறித்துக்கொண்ட அதே விவசாயி சின்னத்திலேயே தேர்தல் களத்தில் நிற்க போவதாக தெரிவித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் 1.1% ஒட்டை பெற்றோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 5% ஓட்டை பெற்றோம். 2021 தேர்தலில் 17.5 லட்சம் வாக்குகளை பெற்றோம். இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. 2024 தேர்தலில் மைக் சின்னத்தை தந்தார்கள். அந்த தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை பெற்றோம். எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம் என்றார்.
நடிகர் ரஜினி சொன்னதைப்போல ”வந்துட்டேன் சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..” என தெரிவித்த சீமான், அந்த விவசாயிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ஆனால் இந்த விவசாயிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. என் எண்ணம் மட்டும் சின்னம் இல்லை. சின்னமே நான்தான். உறவை மீட்போம் உலகை காப்போம் என்பதை முன்வைத்து இந்த தேர்தலில் நாங்கள் களத்தில் நிற்போம். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் 117, ஆண்களும், 117 பெண்களும், அதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். மாணவர்கள் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படும் மற்றவர்களுக்கு தேர்தல், நமக்கு நிலம் காக்கும் போர் என சீமான் தெரிவித்தார்.