Advertisment

8 ஆண்டுகளில் நாம் தமிழருக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்; 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம் – சீமான் உறுதி

சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சி – சீமான்

author-image
WebDesk
New Update
Naam Tamilar Katchi Mic symbol for Lok Sabha polls 2024 Seeman Tamil News

சீமான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்! தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! 

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. 

‘தமிழ்த்தேசியம்’ எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி. 

2016 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும். 

இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,600,088 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment