முதல்வர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த டிச.31ம் தேதி அறிவித்தது.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் களப்பணிகளில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை முதன் முதலாக அறிவித்துள்ளது.
முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று அறிவித்த சீமான், இம்முறை தனித்து போட்டியிடுவோம் என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது தனது கட்சியின் வேட்பாளரையும் சீமான் அறிவித்திருக்கிறார்.
கஜா புயல் பாதிப்பின் போது, திருவாரூரில் சாகுல் அமீது களப்பணி ஆற்றியவர் என்று கூறப்படுகிறது.