Advertisment

'அதிகாரத் திமிர்; மமதை; எத்தனை காலத்திற்கு ஆட்டம் போடுவீர்கள்?' தி.மு.க அரசு மீது சீமான் காட்டம்

பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைது செய்வது ஊடகச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்; பெலிக்ஸ் ஜெரால்டு கைதுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

author-image
WebDesk
New Update
Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; ”'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் தி.மு.க அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சவுக்கு சங்கர் பேசிய கருத்துகளுக்காக பல்வேறு வழக்குப் பாய்ச்சப்பட்டு, ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நேர்காணலில் நெறியாளுகை செய்ததற்காக பெலிக்ஸ் ஜெரால்டையும் தற்போது கைது செய்திருப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைது செய்யும் இச்செயல்பாடு ஊடகச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும். 

இது ஊடகச் சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. காட்சி ஊடகங்கள், வலையொளிகளின் நேர்காணல்களில் பங்கேற்பாளர்கள் பேசும் கருத்துகளுக்கு அதன் நெறியாளர்களோ, அதனை ஒளிபரப்பும் ஊடகங்களோ ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என்பது அடிப்படை ஊடகச் செயல்பாடு. அப்படியிருக்கையில், எதற்காக இந்த கைது நடவடிக்கை? தி.மு.க அரசின் மீது விமர்சனங்களை வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கும் அச்சுறுத்தல் இல்லையா இது? தி.மு.க ஆட்சியின் கொடுங்கோன்மையைப் பேசியவர்கள் எல்லாம் குறிவைத்து அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவார்களென்றால், நடப்பது மக்களாட்சியா? இல்லை! பாசிச ஆட்சியா? பேரவலம்! 

தம்பி சவுக்கு சங்கர் காவல்துறையினர் குறித்துத் தெரிவித்தக் கருத்துகள் தவறானவை; அதனை ஏற்க முடியாது. அப்பேச்சுக்காக அவரைச் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்துவதில் நமக்கு எந்தச் சிக்கலுமில்லை. அதேசமயம், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரைச் சிறைக்குள் வைத்துத் துன்புறுத்துவதும், அடித்து உதைத்து கையை உடைப்பதும், அடுத்தடுத்து பல பொய் வழக்குகளைப் பாய்ச்சி அலைக்கழிப்பதும் கொடும் அரசியல் பழிவாங்கும் போக்கு இல்லையா? தமிழ்நாடு முழுமைக்கும் போதைப்பொருட்களைப் புழங்கவிட்டுவிட்டு, சவுக்கு சங்கரின் வாகனத்தில் கஞ்சாவை எடுத்ததாகக் கூறுவது நம்பும்படியாக இருக்கிறதா? எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா? எதற்கு இத்தனைத் திரைக்கதை அமைக்கிறீர்கள் பெருந்தகைகளே? அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், அவசர நிலையின்போது காவல்துறையால் சிறைக்குள் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் ஐயா ஸ்டாலின் அவர்கள், காவல்துறையை வைத்துக் கொண்டு இத்தகையக் கொடூரங்களை நிகழ்த்தலாமா? இதுதான் சமூக நீதி ஆட்சியா? விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! 

தி.மு.க கடந்த காலங்களில் காட்டிய பாசிச முகத்தை மீண்டும் காட்டத் தொடங்குகிறதா? 2006 - 2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்குப் பின்னர், பத்தாண்டு காலம் அதிகாரத்தை இழந்து நின்றது மறந்துபோனதா? அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் எத்தனைக் காலத்துக்கு ஆட்டம்போடுவீர்கள் பெருமக்களே? பெரும் சாம்ராஜ்ஜியங்களும், பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளே வரலாற்றில் வீழ்ந்திருக்கிறார்கள். மக்கள் கொடுத்த அதிகாரத்தில்தான் நீங்களெல்லாம் இன்று உயரே நிற்கிறீர்கள்! மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் மொத்தமாய் சரிந்து விழுவீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், உங்கள் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே! அதற்குப் பிறகு, எங்கே இருப்பீர்கள்? ஆட்சியில் இருந்துகொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அடாவடித்தனமும், அட்டூழியமும் செய்யும் இதுபோன்ற பாசிச ஆட்சிகளையும், கொடுங்கோல் அரசுகளையும் மக்கள் கட்டாயம் தூக்கி எறிவார்கள் என ஆளும் ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன். 

இத்தோடு, ஊடகவியலாளர் தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கையும், கைது நடவடிக்கையையும், தம்பி சவுக்கு சங்கர் மீது சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும், புனையப்படும் பொய் வழக்குகளையும், அவர் மீதான அரசின் பழிவாங்கும் போக்கையும் வன்மையாக எதிர்க்கிறேன்." இவ்வாறு சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman Felix Gerald
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment