தனது யோகா திறமையால் இணையத்தில் வைரலான கோவையைச் சேர்ந்த யோகா பாட்டி நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2018 ஆண்டிற்கான பத்மஸ்ரீ , பத்மவிபூஷன் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் கோவையைச் சேர்ந்த, 98 வயதுடைய நானம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. யார் இந்த நானம்மாள் பாட்டி? அவர் செய்த சாதனைகள் என்ன? என்று கேட்பவர்கள் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் சென்று, ‘கோவை யோகா பாட்டி’ என்று தேடினால் போதும் முதலில் வந்து நிற்பது நானம்மாள் பாட்டி தான். தன்னுடைய 8 வயதில் யோகா செய்வதை ஆரம்பித்த நானம்மாள் பாட்டி, இப்போது வரை ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பல்வேறு யோகாசனங்களை அசாத்தியமாக செய்து வருகிறார். அதனுடன் கோவையை சேர்ந்த யோகா ஆசிரியர்கள் பலர் ,நானம்மாள் பாட்டியின் முன்னாள் மாணவர்கள் தான் என்பது கூடுதல் சிறப்பு.
இவரின் குடும்பத்தை சேர்ந்த பலரும், தற்போது வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் மிகச் சிறந்த யோகா ஆசிரியர்களாக பணிப்புரிந்து வருகின்றனர். சொந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லாத நானம்மாள் பாட்டி தனது இறுதி மூச்சு வரை கோவை மண்ணிலேயே யோகா ஆசிரியராக இருக்க விரும்புவதாக கூறி வருகிறார். யோகாவை தனது உயிர் மூச்சாக நேசிக்கும் நானம்மாள் , தினமும் காலையில் யோகாசனங்கள் செய்ய ஒருநாளும் மறந்ததில்லை என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.
தேசிய அளவிலான யோகாப் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ள நானம்மாள் பாட்டி, இதுவரை 5 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், கர்நாடக அரசின் யோக ரத்னா விருது, குடியரசுத் தலைவரிடம் இருந்து பெண் சக்தி விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி கோவை நகரத்தையே பெருமைப்பட வைத்துள்ளார். அதனால்தான், இவருக்கு 2018 ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்த போது, கோவை நகரமே மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளது.