மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தான், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் வரும் 19ம் தேதி, சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் அந்த தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது கமல் பேசிய கருத்து, பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி அவர் என்ன பேசினார்...
தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் அது தவறு தான். இந்து தீவிரவாதி என்று இங்கு முஸ்லீம்கள் கூடியிருக்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை. காந்தி சிலை முன்பு நின்றுகொண்டு கூறுகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. நான் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்.
இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்கள் அப்படியே உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு.