நாகை மாவட்டம் திருமருகL ஒன்றியம் நரிமணத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, காவிரி படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கப்பல்களுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் வகையில், சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமம் பகுதியில் செல்லும் குழாயில் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய், சாமந்தான்பேட்டை மீனவ கிராமம் வரை பரவியுள்ளது. இதனால், அதில் இருந்து வெளியேறும் வாயு மற்றும் துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சம்பவ இடத்தில் சிபிசிஎல், ஓஎன்ஜிசி அதிகாரிகள், தீயணைப்பு, மீன்வளம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிபிசிஎல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும். கடலில் எவ்வளவு லிட்டர் கச்சா எண்ணெய் கலந்துள்ளது என்பது குறித்து உடனடியாக தெரிவிக்க முடியாது’’ என்றனர்.
இதனிடையே, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 சார்லி கப்பல்கள் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பதை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இங்குள்ள குழாயை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும், சென்னை பெட்ரோலிய கழகத்தின் குழாய் இப்பகுதியில் இருக்கக் கூடாது, அதை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள், மீனவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“