தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் முழுவதும் சுமார் 96 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர், மறைக்கான்சாவடி, திருப்புகலூர், வடுகச்சேரி, கிராமத்துமேடு, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.
நாகை பாப்பாகோயில் அருகேயுள்ள நரியங்குடி கிராமத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள 57 வீடுகளை, ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் அப்பகுதி மக்கள் குளிரில் குழந்தைகளுடன் குடிசைக்குள் பரிதவித்து வருகின்றனர்.
திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப .கொந்தகையில் உமர் வீதி, பள்ளிவாசல் தெரு, அரிசிக்கார தெரு, நாகூர் சாலை, தாவூது நாச்சியார் குடியிருப்பு, பீமா தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. அந்த மழை நீரை அகற்றும் பணிகளில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் நாகை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், மீன்வளத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து 9-வது நாளாக கடலுக்கு செல்லாமல் மொத்தம் 700 விசைப்படகுகள், 3500 பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“