நாகப்பட்டினத்தில் ரன்னிங் ரேஸ் ஓடிய மாணவர் ரிஷி பாலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில், விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, நான்கு மணி நேரம், மைதானத்தில் வெயிலில் நிறுத்தி வைத்துள்ளனர். வெயில் தாங்க முடியாமல், 12ஆம் வகுப்பு படிக்கும் ரிஷி பாலன் என்ற மாணவர், மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
போட்டிகளைத் துவக்கி வைக்க வேண்டிய மாவட்டக் கல்வி அலுவலர், மயிலாடுதுறை பகுதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருவதை ஒட்டி காலதாமதமாக வந்ததால், ஒரு மாணவர் உயிர் பறி போயிருக்கிறது.
மயங்கி விழுந்த மாணவருக்கு, முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்ததாகத் தெரியவருகிறது. மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பொறுப்பின்மையால்,
கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோர்களின் ஒரே நம்பிக்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் வேறொரு பகுதி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதற்காக, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த பள்ளி மாணவர்களை நான்கு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பது என்ன விதமான மனநிலை? ஏழை எளிய மாணவர்கள் என்றால் அத்தனை மலிவாகிவிட்டதா தமிழக அரசுக்கு?
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பான தமிழக அரசு, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்த அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உடனடியாக இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு, தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.