தமிழகத்தில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு சுமார் 40 வருடங்கள் கழித்து நாகையில் இருந்து இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு இன்று காலை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது.
இன்று காலை நாகையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட கப்பலை இயக்கும் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் மட்டும் சோதனை ஓட்டமாக கப்பலில் பயணம் செய்தனர். நாகையில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும் இந்தக் கப்பல் மீண்டும் அங்கிருந்து மாலை நாகை துறைமுகத்திற்கு வந்து சேரும்.
/indian-express-tamil/media/post_attachments/f8f9818e-208.jpg)
பின்னர், இதேபோல் நாளையும் காலை சோதனை ஓட்டம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் அக்டோபர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் நாகையில் இருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவிருக்கின்றது.
நாகையில் இருந்து இலங்கைக்கு ரூ.6,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7670 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ள அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நாளை மறுநாள் இலங்கைக்கு கடல் மார்க்கம் மூலம் செல்ல இதுவரை 14 நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து ஆர்வத்துடன் காத்திருப்பதாக நாகை துறைமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது.
முன்னதாக, கடந்த மாதம் 20-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தன.
மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று சிறப்பு பயிற்சி பெற்றனர். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட ’செரியாபாணி’ என்ற இந்தக் கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்க கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் நாள்தோறும் நாகை - இலங்கைக்கு இடையே இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“