வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்பட்டு வந்த நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்போது பயணிகளின் வசதிக்காக இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை வரையிலான கப்பல் போக்குவரத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஆனால், அப்போது கனமழை பெய்து வந்ததால் இந்த சேவையை தொடர முடியவில்லை. இதையடுத்து, இந்த சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, காலநிலை சூழ்நிலை இயல்பாகியதை அடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 'சிவகங்கை' எனப் பெயரிடப்பட்ட கப்பலானது அந்தமானில் இருந்து கடல் மார்க்கமாகச் சென்னையை அடைந்து நாகை துறைமுகத்தைச் சென்றடைந்தது. இந்தக் கப்பலில் சாதாரண வகுப்பு, ப்ரீமியம் என இரு வகையான வகுப்புகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண வகுப்பில் 123 இருக்கைகள் உள்ளன. அதற்கான கட்டணமாக ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் உள்ளன. இதில், ஒரு பயணிக்கு 7,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதாகும். மேலும் இதில் தொலைக்காட்சி வசதியும் உள்ளது. கப்பலுக்குள்ளேயே உணவகமும் செயல்பட்டு வருகிறது.
இந்த கப்பலில் தென்னிந்திய உணவுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த கப்பல் சேவை முதலில் தினந்தோறும் நாகப்பட்டினம் - இலங்கை, இலங்கை - நாகப்பட்டினம் என இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர், பயணிகள் முன்பதிவு செய்வது குறைவாக இருந்ததால் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்களுக்கு மட்டும் கப்பல் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வந்தது.
பின்னர், சனிக்கிழமை உட்பட்ட 4 நாட்களாக கப்பல் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, டிக்கெட் முன்பதிவு செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம் - இலங்கை போக்குவரத்து சேவையை இனி வாரத்தில் 5 நாட்களாக அதிகரிக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் வசதிக்காக நவம்பர் 8 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வரும் வாரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை உட்பட வாரத்தில் 5 நாட்கள் கப்பல் இயக்கப்படவுள்ளது.
பயணிகள் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திருச்சியில் இருந்து இலங்கைக்கு வாரத்தின் 5 நாட்கள் விமானம் இயக்கப்பட விருப்பம், விசா இல்லாமல் இலங்கை சென்று வரலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இலங்கைக்கு அதிகரித்திருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“