நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை "செரியாபாணி" என பெயரிடப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்க ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கப்பல் போக்குவரத்து சேவைக்கான சோதனை ஓட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. நாகையில் இருந்து இலங்கைக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பல் சேவையை நாளை அக்.14ல் மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர்.
நாகை துறைமுக பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.பயணிகள் கப்பலின் பயண கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.6500 + 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு 75% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை நாகையில் இருந்து இலங்கைக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பலில் ஒருநாள் மட்டும் அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் 2375 +18 % வரியுடன் நபர் ஒன்றுக்கு ரூ.2803 பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 35 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், சலுகை விலை அறிவிப்பால் கூடுதலாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சிறப்பு சலுகை விலை டிக்கெட் அறிவிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்