கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ்- பா.ஜ.கவினர் இடையே 2 தினங்களுக்கு முன் கல் வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இரு தரப்பில் இருந்தும் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 6) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதம் பேராட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சி வாடகைக்கு ஆட்களை எடுத்து கட்சி நடத்துகிறது. தாங்கள் காங்கிரஸ் கட்சியினர் எனக் கூறிக் கொள்ளும் குண்டர்கள் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். ஏப்ரல் 3-ம் தேதி நடந்த மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளாக என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து நாளை 6-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
செய்தி: த.இ.தாகூர்