அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பா.ஜ.கவினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 40 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் இந்திரா காந்தி சிலை சந்திப்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
செய்தி: த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil