நாகர்கோவிலில் கடந்த 7ஆம் தேதி தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக தி.மு.க.,வின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மகேஷ் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் எல்லாம் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று பேசும் பாஜகவின் கொட்டத்தை அடக்குவோம். எங்கள் கொடிகளுக்கு இடையே பாஜக கொடியை என்ன காரணத்திற்கு சொருகி சென்றீர்கள்.? ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் பாஜக கொடியை நான் அகற்றிவிட்டேன் என புகார் கொடுத்தார்கள்.
நான் கடந்த 36 ஆண்டுகளாக இந்த ஊரில் வழக்கறிஞராக இருக்கிறேன். 26 ஆண்டுகள் கட்சியில் அடிபட்டு, உதை பட்டு, பொய் வழக்குகளை சந்தித்து நான் இந்த பதவிகளுக்கு வந்துள்ளேன்.
மதத்தை சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கும் பாஜகவின் கபட நாடகத்தை குமரியில் நடத்த விடமாடாடோம். பாஜகவினருக்கு இது கடைசி எச்சரிக்கை. திமுகவின் கொடிகளை நோக்கி பாஜக வினரின் விரல்கள் நீண்டால்..... ஒட்ட வெட்டுவோம்” என்றார்.
இது தொடர்பாக நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர் கோட்டார் காவல் நிலையத்தில் புதன்கிழமை (நவ.9) புகார் கொடுத்தனர்.
அந்தப் புகாரில், மேயரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவரின் பேச்சை கண்டித்து மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil