ஒற்றைப் புகைப்படம், போட்டோகிராபர் ஜாக்ஸன் ஹெர்பியை தமிழகம் தாண்டியும் பேச வைத்திருக்கிறது. தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட நாகர்கோவில் ஏழை மூதாட்டி வேலம்மாள் மகிழ்ச்சி பிரவாகமாக வெளிப்படித்திய சிரிப்பை, தத்ரூபமாக வெளிப்படுத்திய புகைப்படம் அது.
தமிழகம் தாண்டியும் பத்திரிகைகள் அந்த புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடின. அண்ணாவின் வாசகமான ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதை உணர்த்தும் விதமாக இந்தப் படம் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி போட்டோகிராபர் ஜாக்ஸன் ஹெர்பியை அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார் ஸ்டாலின்.
ஐஇ தமிழுக்காக ஜாக்சன் ஹெர்பியுடன் நாம் பேசினோம். ‘முதல்வரை சந்தித்தது உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம். எனக்கு பேசவே வாய் வரவில்லை. என்னுடன் வந்த அமைச்சர் மனோ தங்கராஜ், என்னைப் பற்றி முதல்வரிடம் கூறினார். சட்டமன்றத்தில் இந்தப் புகைப்படம் அடிப்படையில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என குறிப்பிட்டு பேசியதை முதல்வர் குறிப்பிட்டார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.’ என்றார் ஜாக்ஸன்.
கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியபோதும், உயிரைப் பணயம் வைத்து பல புகைப்படங்களை எடுத்து பாதிப்பின் கோரத்தை உலகுக்கு உணர்த்தியவர் ஹெர்பி. அந்தப் புகைப்படங்களை வைத்து நாகர்கோவிலிலும் சென்னையிலும் புகைப்பட கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார்.
அந்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்ட ஜாக்சன், ஏழ்மையான பின்னணியில் இருந்து பல்வேறு போராட்டங்கள், அவமானங்களை சந்தித்து இன்று பலரும் கவனிக்கும் நபராக வந்திருப்பதை நெகிழ்வுடன் விவரித்தார். தன்னை ஊடக உலகுக்கு அறிமுகப்படுத்திய தனது மாமா மதன்குமார், தனது புகைப்படங்களை கவனித்து ஊக்கப்படுத்திய கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜோதி நிர்மலா ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள், சொத்தை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு தனக்கு கேமரா வாங்கித் தந்த தனது தந்தை ஹென்றி என பலரையும் நினைவு கூர்ந்தார். ஏழ்மையான நிலையிலும் தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு ஜாக்சன் ஒரு உதாரணம். அவரது முழுப் பேட்டியை ஐஇ தமிழ் யூ டியூப்பில் காணலாம