நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் கழிவு நீர் ஓடையின் மீது ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையின் கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாநகராட்சி ஆணையாளருக்கும் குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் அனுப்பியிருந்த புகார் மனுவையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தில், கோட்டார் சானல் உள்ளது. மேற்படி சானல் வல்லன் குமாரவிளையிலிருந்து பிரிந்து தெங்கம்புதூர் சானலாகவும், கோட்டார் பூசானலாகவும் 2 சானலாக பிரிந்து செல்கின்றது.
இந்த கோட்டார் சானல் 4 கிமீ தூரத்திற்கு கீழச் சரக்கல்விளை, வட்டவிளை, வைத்தியநாதபுரம், சரலூர் வழியாக 30 அடி சானலும், சாவலின் இரண்டு புறமும் 30 அடி ரோடும் இருந்தது கழிந்த 25 வருடத்திற்கு முன்பு வரை. தற்பொழுது வைத்தியநாதபுரத்தில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சானலாகவும் ரோடாகவும் உள்ளது.
தற்பொழுது மேற்படி கோட்டார் சானல் காணாமல் போய் கழிவு நீர் ஓடையாகவும். தார் ரோடாகவும், மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி சானலின் மேல் அருகே இருக்கும் நியாயவிலைக் கடை முன்பு, புதிய நியாயவிலைக் கடை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றது.
இதனால் மேற்படி கழிவு நீர் ஓடை 50 அடியாக இருந்தது தற்பொழுது 20 அடியாக மாற்றப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கழிவு நீர் ஓடையின் மேல் பகுதியில் ரோடு மிகக் குறுகி ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
அதோடு இந்த ரோட்டை ஆக்கிரமித்து குழந்தைகளின் சத்துணவு கூடமும் கட்டியிருப்பதால் எந்த நிமிடமும் வாகனங்களினால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நுகர்வோர் சங்க கோரிக்கையை ஏற்று உடனடியாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் புதிய நியாயவிலைக் கடை ஓடையின் மீது கட்டுவதை நிறுத்தி தடையாணை பிறப்பித்துள்ளார்.