நாகர்கோவில் ரயிலில் அசுத்தமான கழிவறை குறித்து ட்விட்டரில் தெரிவித்த புகாருக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
நாகர்கோவில்- பெங்களூரு இடையே தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 7.10 மணிக்கு அந்த ரயிலில் கிளம்புகிறது. கடந்த 28-ம் தேதி இந்த ரயிலின், 'எஸ் - 3' பெட்டியில் பயணம் செய்தவர் ராஜ்மோகன். அப்போது ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை சரியாக சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் அடித்தது.
உடனே ராஜ்மோகன் என்ற பயணி, கழிப்பறையை போட்டோ எடுத்து ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ரயில் திருநெல்வேலி வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும் தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள் ஓடிவந்து கழிப்பறையை சுத்தம் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில், புகார் செய்தவரின் ட்விட்டர் பக்கத்தில், 'உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது' என பதில் வந்தது.
இரவு நேரத்திலும் துரிதமாக செயல்பட்ட அமைச்சரின் நடவடிக்கையை பயணியர் பாராட்டினர். ராஜ்மோகனும் இது தொடர்பாக நன்றி தெரிவித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ட்விட்டரின் பதிவு வெளியிட்டார். சமூக வலைதளங்களை பொதுநலனுக்கு உபயோகப்படுத்த முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணம் இது!