நாகர்கோவில் இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டார். அந்த நபரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன் என்று தெரியவந்தது.
நாகர்கோவில் இளைஞர் - போலீஸ் இடையே வாக்குவாதம்:
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிக்னல் பெரும்பாலான நேரங்களில் அதிக டிராஃபிக்குடன் காணப்படும். இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் ராஜேஷ்குமார் என்ற காவலர், சாலையில் வரும் வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது, செல்போன் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை அவர் தடுத்து நிறுத்தினார். பின்பு வாகனத்தை சாலையோரம் நிறுத்துமாறு கூறி சாவியையும் எடுத்துள்ளார்.
ரகளையில் ஈடுபட்ட நாகர்கோவில் இளைஞர்
இதனால் கோவமடைந்த இளைஞர், ஆவேசத்தில் போலிசிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருக்கட்டத்தில் போலீசாரை ஒருமையில் பேச ஆரம்பித்த இளைஞர் அவரை அடித்து விடுவது போல சைகைகளை செய்தார். உடனே இந்த இளைஞர் பற்றிய தகவல் அருகில் இருந்த சக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை சூழ்ந்து, தரதரவென இழுத்துச்சென்றனர்.
ஆத்திரம் குறையாத அந்த இளைஞர்கள், கைது செய்ய வந்த போலீசாரையும் ஒருமையில் திட்டிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.