/indian-express-tamil/media/media_files/2025/06/01/xAsDGuiMaBzI5iJkprwA.jpg)
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 1) பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் கமல்ஹாசன் குறித்த பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
அதன்படி, "இதுதான் திராவிட மாடல் அரசு. முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. அதிகாரிகள் அனைத்தையும் மறைத்துவிடுகிறார்கள். முதல்வருக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதிகாரிகள் அதனை மறைத்து விடுகிறார்கள். முதல்வர் டெல்லி சென்று தாமிரபரணி, வைகை ஆறுகளை சுத்தப்படுத்த வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால், இங்கு இருக்கும் சாக்கடையை சுத்தப்படுத்த கூறி இருந்தால் நன்றாக இருக்கும்.
"வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பது தான் கமல்ஹாசனின் முதல் கொள்கையாக இருந்தது. ஆனால் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்ததும் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார். அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி முக்கியம்; எந்த மொழி பெரியது என்பதில் கருத்து சொல்ல முடியாது. நம்முடைய தாய்மொழி நமக்கு முக்கியம், அதைத்தான் சொல்ல வேண்டுமே தவிர, குறிப்பாக கமல் அவர்கள் கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல்வரால் பிரச்சனை வந்தது என்று சொன்னார். ஆனால் அந்த முதல்வர் படப்பிடிப்பிற்காக செல்லும்போது 'கன்னடம் வாழ்க' என்று சொல்ல வேண்டுமென அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள். ஆனால் அம்மா அவர்கள் தைரியமாக 'தமிழ் வாழ்க' என்று சொல்லிவிட்டு வந்தார். எனவே, கமல் அவரது நிலையில் இருந்து மாறி ராஜ்யசபா சீட்டுக்காக பேசி வருகிறார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகத்தில் இருக்கிறது. குறிப்பாக நெட்வொர்க் சார்ஜ் என்பது குறைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மாநில அரசு எதுவுமே செய்வதில்லை. வீடு கொடுக்கும் திட்டமாக இருந்தாலும் சரி, எந்த திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசு மத்திய அரசின் திட்டத்தை முழுவதுமாக மறைத்து விடுகிறது.
இன்றைக்கு ஆளும் கட்சியில் பிரதீஷ் 300 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்கிறார்கள். ஆகாஷ் 500 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்கிறார்கள். மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு 35 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். இன்றைக்கு இந்த அளவிற்கு பணம் தி.மு.க-விடம் உள்ளது என்று விஜய் சொல்வது உண்மைதான். பெட்டி பெட்டியாக பணம் கொடுப்பார்கள் என்று சொல்வது வரக்கூடிய தேர்தலில் தெரியும். யாருக்கு வாக்களித்தால் நன்றாக இருக்குமோ, நல்லது நடக்குமோ என்று மக்கள் முடிவு செய்யுங்கள்.
வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தவரை அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம், அது பற்றிய கருத்தை நாம் சொல்ல முடியாது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.