/indian-express-tamil/media/media_files/2025/08/30/nainar-nagendran-demands-white-paper-dmk-govt-tn-cm-stalin-foreign-trip-investments-tamil-news-2025-08-30-14-29-31.jpg)
தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ரூ. 6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது" என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அறிக்கை எப்போது வெளியாகும் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெயிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் ரூ. 7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், டாவோஸ் பயணத்தில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ரூ. 6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.
மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ரூ. 7,500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும். இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.