Nainar Nagendran: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடும் முழுதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்றைய நாள் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஆஜராக அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பா.ஜ.க தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று (திங்கள்கிழமை) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “தேர்தல் பணி, சொந்த பணி காரணமாகவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகிறேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐகோர்ட் உத்தரவு
இதற்கிடையில், நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் இரண்டு வழக்குகளாக தாக்கல் செய்திருந்தார். ஒன்று, தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வருவதாகவும், குறிப்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதினால், அவர்களும் விசாரணை நடத்துவார்கள் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தரமோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்றும், இருப்பினும் இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“