/indian-express-tamil/media/media_files/2025/09/23/nainar-nagen-2025-09-23-08-27-09.jpg)
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க: டெல்லியில் நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் சில குழப்பங்கள் நிலவுவதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்குச் சென்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க. உட்படப் பல கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வார தொடக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், தேர்தல் வியூகம், கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் தனியாக சுமார் அரை மணி நேரம் பேசினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாகத் தகவல் வெளியானது.
அதேநேரத்தில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை, தினகரனை வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று திடீரென டெல்லிக்குச் சென்றார். அங்கு அவர் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் சூழல், கூட்டணி வியூகம், அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நட்டாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "அக்டோபர் 12-ம் தேதி மதுரையில் இருந்து எனது மக்களை சந்திக்கும் பயணம் தொடங்கவுள்ளது. இதில் ஜே.பி.நட்டா அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவர்கள் முடிந்தவரை வர முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனது சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடமும் தெரிவித்தேன். யார், யார் வருகிறார்கள் என்று கேட்டார். நிச்சயமாக வருவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். எங்களின் தேர்தல் சுற்றுப்பயணம் பெரிய வெற்றி பெறும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.