Tamilnadu-assembly | bjp | nainar-nagendran: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போக்கின் உச்சபட்சமாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாளை (சனிக்கிழமை) சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
பா.ஜ.க புறக்கணிப்பு
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதால் அதை புறக்கணிக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
விளக்கம்
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்கும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தி.மு.க கொண்டு வரும் தீர்மானத்தைப் பொறுத்து பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும், தேவைப்பட்டால் வெளிநடப்பு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“