/indian-express-tamil/media/media_files/2025/05/06/6v5Qj62S9BVYrT0PCjIX.jpg)
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளும் பா.ஜ.க-விற்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று (மே 6) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது, "கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் நிர்வகிப்பது குறித்த வேலைகளை மேற்கொள்கிறோம். தி.மு.க வந்த பிறகு தொடர்ந்து படுகொலைகள் நடக்கிறது.
பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகிரி சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும், கொங்கு பகுதியில் தோட்டத்தில் வசிப்பார்கள். தி.மு.க ஆட்சிக்கு வராத காலத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் இருந்தனர். தற்போது தோட்டத்தை காலி செய்துவிட்டு வெளியூர் செல்கின்றனர்.
அதேபோல், பல்லடத்தில், 7 கொலைகள் கஞ்சா போதையால் நடந்தது. தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதில், காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.
வங்கதேசத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை ஆதீன விவகாரத்தில், காவல் நிலையத்தில் யார் வழக்கு தொடுக்கிறார்களோ அவர்களை தான் முதலில் தி.மு.க பிடிக்கும். அது போன்று தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடைபெற்று உள்ளது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதப் பிரச்சனைகள் குறித்து நாங்கள் பேசவில்லை. நாங்கள் முதலமைச்சரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினர் வாக்குகளை வாங்குவதற்காக நாங்கள் மதம் குறித்து பேசுவதாகக் கூறி தூண்டி விடுவதே முதலமைச்சர் ஸ்டாலின் தான்.
இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகளும் பா.ஜ.க-விற்கு கிடைக்கும். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை ஆதரித்து பேசியதற்காக ஜபார் என்பவரை ஜமாத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அவர் நீக்கப்பட்டது ஜமாத்தின் நடவடிக்கை. அதனை நாங்கள் குறை கூற முடியாது. ஒரு ஜபார் போன்று பல்வேறு ஜபார்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" எனக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.