/indian-express-tamil/media/media_files/2025/10/16/nainar-nagenthran-trb-raja-2025-10-16-06-39-29.jpg)
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது, புதிய முதலீடு எனத் தி.மு.க கூறி வருவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை அறிவிக்கை ஒன்றினை வெளியிடச் செய்ய வேண்டும்!” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn), தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் 14,000 உயர்மதிப்புள்ள பொறியியல் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் திங்கள்கிழமை (நேற்று) அறிவித்தது. அத்துடன், மாநிலத்தின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான வழிகாட்டி தமிழ்நாட்டில், நாட்டின் முதல் பிரத்யேக “ஃபாக்ஸ்கான் மேசையை” நிறுவ இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கானின் இந்தியப் பிரதிநிதி மற்றும் மூத்த உலகளாவிய நிர்வாகி ராபர்ட் வூ ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு வெளியானது. இந்தச் சந்திப்பை அதிகாரிகள், நிறுவனத்தின் மாநிலப் பங்களிப்பில் ஒரு “புதிய மைல்கல்” என்று விவரித்துள்ளனர்.
இது குறித்து டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாகவும் 14,000 உயர்மதிப்புள்ள வேலைகளை உருவாக்குவதாகவும் உறுதியளிக்கிறது. பொறியாளர்களே, தயாராகுங்கள்! தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான வழிகாட்டி தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் முதன்முறையாக ஒரு பிரத்யேக ஃபாக்ஸ்கான் மேசை அமைக்கப்படவுள்ளது” என்று திங்கள்கிழமை பதிவிட்டார்.
மேலும், “தமிழ்நாட்டின் மின்னணுவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைக்கு இது மேலும் ஒரு முக்கிய உந்துதல்... ஃபாக்ஸ்கான் அதன் அடுத்த கட்ட மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மேம்பட்ட தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும். நாங்கள் திராவிட மாடல் 2.0-க்கு அடித்தளம் அமைக்கிறோம்!” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
புதிய முதலீட்டை வரவேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில்துறைத் துறையின் ஒற்றைச் சாளர வசதி அமைப்பு மற்றும் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் முழு ஆதரவை உறுதியளித்தார். “இந்த முயற்சி, தமிழ்நாடு ஒரு உற்பத்தி மையமாக இருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கான ஒரு மூலோபாயக் கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் மையமாக மாறுவதைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கு தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க அரசின் அறிவிப்புகள் அரை நாளிலேயே அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்தது உறுதியான செய்தி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடு ரூ.15,000 கோடி வருகிறதா இல்லையா என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா?
— Nainar Nagenthran (@NainarBJP) October 15, 2025
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ₹15,000 கோடி முதலீடு செய்ததாகத் திமுக அரசு அறிவித்த வேளையில், "அது புதிய முதலீடல்ல" என்று நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளித்தது பத்திரிகைச் செய்திகளில்…
இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ததாகத் தி.மு.க அரசு அறிவித்த வேளையில், "அது புதிய முதலீடல்ல" என்று நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளித்தது பத்திரிகைச் செய்திகளில் வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவசரகதியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "அது உண்மையான முதலீடு" என்று விளக்கமளித்தார். ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் பொது வெளியில் தரவில்லை. முதலீடு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்த நிறுவனமும், மாற்று அறிவிக்கை ஏதும் வெளியிடவில்லை!
எதற்கு இந்தக் குழப்பம்? ஒருவேளை என்.டி.ஏ ஆளும் ஆந்திரா மாநிலத்தில் கூகுள் நிறுவனம் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதை அறிந்ததும், தி.மு.க அரசின் குறைபாடுகளை மூடி மறைத்து திசைதிருப்ப முழுமையடையாத அல்லது போலியான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை, பழைய முதலீடு தூசித்தட்டப்பட்டு புதியது போல பாவனை செய்யப்பட்டதா? எது உண்மை?
முதன்முதலில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் என்னும் அடிப்படையில் கேட்கிறேன். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது, புதிய முதலீடு எனத் தி.மு.க கூறி வருவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை அறிவிக்கை ஒன்றினை வெளியிடச் செய்ய வேண்டும்!” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.