ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலிவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் 3 பேரிடமிருந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறிமுதல், போலீசார் செய்தனர்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் துறையிடம் இருந்த வழக்கு ஆவணங்கள், விசாரணை விவரங்கள் அனைத்தும் சிபிசிஐடி பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் லோகநாதன் கடந்த 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினார்.
முன்னதாக, 15 பேரிடம் விசாரணை நடத்தி, சுமார் 350 பக்கவிசாரணை அறிக்கையை தாம்பரம் போலீஸார் தயார் செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
அதுகுறித்து விசாரணையை தொடங்கிய ஆய்வாளர் லோகநாதன், தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் , நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலிவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“