/indian-express-tamil/media/media_files/2025/05/21/GvVVvJwUZjTH474t2rfb.jpg)
"ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் ஆளும் அறிவாலய அரசு அதற்கான விளைவுகளை வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் அறுவடை செய்யும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறையில்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோடை விடுமுறை முடிந்து, இன்று (02.06.2025) முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் காலியாக உள்ள 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TRB) கடந்த 2023-2024ம் ஆண்டு தேர்வு நடத்தியது. அதில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி காத்துக் கிடக்கிறார்கள் என்பதையும் 'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்' என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 177-ன் படி அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதையும் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பே தமிழக பா.ஜ.க. சார்பாக நான் சுட்டிக் காட்டி இருந்தேன்.
ஆக, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடமும் அதற்கு தகுதியான ஆசிரியர்களும் தயாராக உள்ள நிலையில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு என்ன சிக்கல்? மாணவர்களின் எதிர்காலம் மீதும், ஆசிரியர்களின் நல்வாழ்வு மீதும் துளியும் அக்கறையில்லாமல், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது தான் ஒரு நல்ல நிர்வாகத்திற்கான அழகா?
ஒருவேளை ஒரு போஸ்டிங் போடுவதற்கு இத்தனை லட்சம் ரூபாய் வேண்டும் என இதிலும் ஊழல் நடத்தத் திட்டமா? 50 வயதைக் கடந்து அரசு ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை தனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாவது நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லையா?
இவ்வாறு ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் ஆளும் அறிவாலய அரசு அதற்கான விளைவுகளை வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் அறுவடை செய்யும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.