Advertisment

நயினார் மூட்டிய அனல்: அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா?

அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜகவுக்கு லாபம், கூட்டணியில் இல்லாவிட்டால் பாஜகவுக்குதான் நஷ்டம் என்று தங்கள் முடிவை அதிமுக தரப்பு சொல்லி இருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியது பாஜக கையில்தான் உள்ளது.

author-image
WebDesk
Jan 29, 2022 00:54 IST
BJP, BJP MLA Nainar Nagenthran controversy speech, AIADMK BJP alliance, நயினார் நாகேந்திரன், பாஜக, அதிமுக, அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா, ஓபிஎஸ், இபிஎஸ், ஜெயக்குமார், local body elections, urban local body polls, tamilnadu, AIADMK, OPS, EPS, Jayakumar

சட்டமன்றத்தில் ஆண்மையோடு முதுகெலும்புடன் தைரியமாக பேசக்கூடிய அதிமுக எம்.எல்.ஏ.க்களை பார்க்கமுடியவில்லை என்று கூறி அதிமுக - பாஜக கூட்டணிக்குள் நயினார் நாகேந்திர அனல் மூட்டியதால் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.

Advertisment

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி இயல்பான கூட்டணி இந்த கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பிடித்தனர்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், அதிமுக 66 உறுப்பினர்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேண்திரன் மூட்டிய அனலால், அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.

தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையோடு முதுகெலும்போடு தைரியமாக பேசக்கூடிய ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வைக்கூட நாம் பார்க்க முடியவில்லை என்று பேசினார். நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அதிமுகவினர் பலரும் கடுமையாக பதிலடிகொடுத்தனர். அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன், அண்ணன் நயினார் நாகேந்திரன் அதிமுக தோளில் தொற்றிகொண்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக நின்று தனது ஆண்மையை நிரூபிக்கட்டும் என்று கூறினார். மேலும், சென்னை கொளத்தூர் அதிமுக நிர்வாகிகள், அதிமுக தலைவர்களை மோசமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிகை எடுக்கக்கோரி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்கு நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அதிமுகவைப் பற்றிய தனது பேச்சு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிமுகவைப் பற்றிய தனது பேச்சுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கருத்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தஞ்சாவூர் மாணவி மரணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனின் கருத்து கட்சியின் கருத்து அல்ல அதிமுக - பாஜக கூட்டணியில் இந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். இருப்பினும், அதிமுகவில் பலரும் நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை எப்போது தொடங்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இனிவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

அதே நேரத்தில், நயினார் நாகேந்திர மூட்டிய அனலால், அதிமுக - பாஜக கூட்டணியும் நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எங்களுடன் இருந்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம்; இல்லாவிடில் அவர்களுக்குதான் நஷ்டம். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார்.

இதனால், அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜகவுக்கு லாபம், கூட்டணியில் இல்லாவிட்டால் பாஜகவுக்குதான் நஷ்டம் என்று தங்கள் முடிவை அதிமுக தரப்பு சொல்லி இருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியது பாஜக கையில்தான் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Local Body Polls #Nainar Nagendran #Aiadmk #Bjp #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment