நக்கீரன் கோபால் கைது வழக்கு : நக்கீரன் கோபால் கைதின்போது நீதிமன்றத்தில் இந்து ராம் பேச எந்த சட்டம் அனுமதியளித்தீர்கள் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் குறித்து கட்டுரை வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை சென்னை காவல்துறை கடந்த அக்டோபர் ஒன்பதாம்தேதி கைது செய்தனர். ஆனால், அந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட 124 சட்டப்பிரிவு பொருந்தாது என எழும்பூர் நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்து நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
நக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி வழங்கியது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
கோபால், அல்லிக்குளத்தில் உள்ள எழும்பூர் 13-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதித்துறை நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதித்துறை நடுவர் கோபிநாத், இந்த வழக்கு குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது ஊடகப் பிரதிநிதியாக பத்திரிகையாளர் என்.ராம் ஆஜராகி, வாதிட்டார். இதையடுத்து நீதித்துறை நடுவர், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க மறுப்புத் தெரிவித்தும், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதியப்பட்டிருப்பது பொருந்தாது எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார். மாஜிஷ்திரேட் நீதிமன்றம் விடுவித்தை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அந்த மனுவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது வழக்கு சம்பந்தமில்லாத மூன்றாவது நபரான இந்து என்.ராமின் வாதங்களை நீதிபதி பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி இதுபோன்று நீதிமன்றங்களில் மூன்றாவது நபர் வாதிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
நீதிமன்றமானது சட்டங்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றும் அதை மக்களின் கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக மாற்ற கூடாது. எனவும் கருத்து தெரிவித்த அவர் இந்த செயல் சினிமாத்தனமாக இருப்பதாகவும் வருங்காலத்தில் இதுபோன்ற ஏதும் நடக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
அதேபோல பதிமூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம் பேச அனுமதித்தது ஏன் எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர் அவர் பேச அனுமதித்தார் என்பது குறித்து வரும் 28 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணையை 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.