தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான ‘பபாஸி’ தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு பிரபல ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் போட்டியிடுவதாகவும் அதற்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ‘பபாஸி’ என்று அழைக்கப்படுகிறது. பபாஸி ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. பபாஸியில் நூற்றுக் கணக்கான பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பபாஸி சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு தேர்தல் முறைப்படி நடைபேறுகிறது. இதற்காக கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ‘பபாஸி’ தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு பிரபல ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் போட்டியிடுவதாகக் கூறி அதற்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நக்கீரன் கோபால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “பபாஸி தேர்தல் வருகிற 27-ம் தேதி சவேரியா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆர்.எஸ். சண்முகம் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். உங்களுக்கு ஏங்க இந்த வேலை என்று கேட்டுவிடாதீர்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். கூட்டாக இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறவர்களை எதிர்த்துதான் நாங்க இந்த அணியில் நிற்கிறோம். ஏனென்றால், துடிப்பான இளைஞர்கள் மூன்றாம் தலைமுறையும் எங்களோடு இருக்கிறார்கள். அனுபவமிக்க அறிவுமிக்க தலைவர் இருக்கிறார். ஆளுகின்ற ஆட்சி நம்முடைய ஆட்சி. எதைக் கேட்டாலும் செய்கிற நிலையில் இருக்கிற ஆட்சி. கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறது. செய்கிற கடமை அவர்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக அவர்களிடத்தில் கேட்டுப் பெறுகிற இடத்தில் எங்கள் அணி இருக்கும். ஏனென்றால், நிறைய பதிபாளர்கள், இதையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிற பதிப்பாளர்கள், இதுதான் எனது எதிர்காலம் என்று இருக்கிற பதிபாளர்களுக்கு யாராவது, நமக்கு பகிர்ந்துகொடுக்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிற ஒரு குழுவாகத்தான் நாங்கள் உங்கள் முன்னாடி நிற்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதை நாங்கள் ஏன் நோக்கமாக வைத்தோம் என்றால், இந்த அணி வெற்றிபெற்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பபாஸி தேர்தலில் நக்கீரன் கோபால் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நக்கீரன் கோபால் 'பபாஸி'யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு புகழ்வாய்ந்த மனிதர் பபாஸியின் பொறுப்புக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை. அவரைபோன்ற ஒரு நாடறிந்த ஊடகவியலாளர் பபாஸியின் பொறுப்பு வந்தால் இந்த அமைப்பின் செயல்பாடும் புகழும் எங்கோ சென்றுவிடும். அச்சமற்று போராடுகிறவர். சவால்களின்மீது சவாரி செய்பவர். நீதிக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க தயங்காதவர்.
எல்லாவற்றையும்விட பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வளர்ச்சிக்காக அதிகாரத்தின் எந்த உயர்மட்டதிலும் சென்று பேசக்கூடிய செல்வாக்கும் தொடர்புகளும் மிக்கவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் அவருக்கு நிகரானவர்கள் அரிது. நியாயமாக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
அண்ணன் கோபால் வென்றால் பபாஸியின் முகமும் செய்ல்பாடும் மிகுந்த உத்வேகம் கொண்டதாக மாறிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.