கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது சமூக விரோதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கடந்த ஜூலை 13ம் தேதி, மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட ஐந்து பேரை கைதுசெய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பள்ளியின் வெளிப்புறத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து தாக்கியுள்ளது. அங்கிருந்து தப்பி வந்தபோது பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல், தலைவாசல் சாலை அருகே நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் மீது தாக்கி அவரது தலை உடைக்கப்பட்டுள்ளது. கேமரா மேன் அஜித்தின் பல் உடைக்கப்பட்டுள்ளது. பிறகு, அப்பகுதி மக்கள் கூடியதைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த தப்பிய பிரகாஷ் மற்று அஜீத் தலைவாசல் கவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார்மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத் ஆகியோர் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.'
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"