தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சுமார் 27 மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர். இருதய நோய், காசநோய், கண் சிகிச்சை, புற்றுநோய், தோல் தொடர்பான பிரச்சனைகள் எனப் பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கினர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/09/whatsapp-image-2025-2025-08-09-16-17-08.jpeg)
அமைச்சர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்
முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 10 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகமும், 5 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகமும், 5 துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தூய்மை நல வாரிய அட்டையும் வழங்கினார்.
முகாமில் ஆய்வு மேற்கொண்டபோது, சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ரித்திக் என்பவன் கால் ஊனத்தால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருவதைக் கண்ட அமைச்சர், உடனடியாக மருத்துவர்களை அழைத்துச் சிறுவனுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதேபோல், காட்டூரைச் சேர்ந்த 3 வயது குழந்தை தர்ஷிகாவுக்கு கன்னத்தில் இருந்த பிறவிக் கட்டியை நீக்க உரிய பரிசோதனைகளைச் செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அமைச்சரின் உடனடித் தலையீடு, மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
தமிழகத்தின் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ்
முகாமிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், “எடப்பாடி பழனிசாமி டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கும் கவனம் செலுத்துகிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார். “கலைஞர் ஆட்சியில் 3.12 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் வெகுவாகக் குறைந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/09/whatsapp-image-2025-2025-08-09-16-17-33.jpeg)
மாநிலக் கல்விக் கொள்கை குறித்த விளக்கம்
மாநிலக் கல்விக் கொள்கை குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். “நாட்டைக் காக்கும் ஸ்டாலின் தான், மாநிலக் கல்விக் கொள்கைக்கும் அடித்தளமிட்டு நல்ல முடிவுகளைக் கொடுக்கத் துவங்கியுள்ளார். மாணவர்கள் கனவு கண்டால் போதும், அதை நாங்கள் நிறைவேற்றித் தருவோம் என்பதுதான் மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம்" என்று கூறினார். மேலும், அரசியல் காரணங்களுக்காக மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும், அதன் பயன்களை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றும் என்று உறுதியளித்த அமைச்சர், “மூன்றாவது மொழி அல்ல, 22-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ் மொழி, தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் நமக்கான தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை" என்று தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
செய்தி: க.சண்முகவடிவேல்