தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டன.
அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி அரசுப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் துவக்கத்தில், வரவேற்பு பதாகையில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. நடைமுறைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் படமும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கூறி, எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான்தான் வழங்குவேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூற, அவரிடமிருந்த சான்றிதழ் அட்டையை எம்.எல்.ஏ. மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்களவை உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மகாராஜனைப் பார்த்து முட்டாள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்ச் செல்வனை பார்த்து, 'அனாவசியமாக பேசிட்டு இருக்காதே, யாரைப் பார்த்து முட்டாள் பய என்கிறாய், ராஸ்கல்' என்று ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தங்கத் தமிழ்ச்செல்வனும் பதிலுக்கு அவரைத் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை மேடையில் இருந்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், விழாவில் பங்கேற்ற பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், மேடையில் பரபரப்பு நிலவியது. பின்னர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் இரு தரப்பு ஆதரவாளர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். இச்சம்பவம் காரணமாக, மருத்துவ முகாம் நிகழ்ச்சி விரைவாக முடிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஒரே கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.