ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.
இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் தாமதத்தைக் கண்டித்து வேலூர் சிறையில் உள்ள நளினி, நேற்று முன்தினம் இரவு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆளுநரை கண்டித்து வேலூர் மத்திய சிறையில் முருகன் பத்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் முருகனுக்கு ஆதரவாக, மகளிர் சிறையில் உள்ள நளினியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார்.
இந்தச் சூழ்நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, ஆளுநர் மாளிகைக்கு மனு அளிக்க சென்ற நளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு அளிக்க நளினியின் தாயார் பத்மா இன்று காலை வருகை தந்தார். அப்போது ஆளுநர் பன்வாரிலால், காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக மதுரை சென்றுவிட்டதாக ஆளுநர் மாளிகை காவலர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் சென்னை திரும்பியதும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்று காவலர்கள் கூறியதை அடுத்து பத்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
