நளினி பரோல் மனு : ஆறு மாதம் பரோல் கோரிய மனுவின் விசாரணைக்கு ஆஜராகி வாதிட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினியை அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த 27 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்பட வில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994 ம் ஆண்டு இயற்றப்பட்ட , ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் எழுவரையும் விடுவிக்க கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தன் தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ரா வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டுமென வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் தான் அளித்த மனு நிலுவையில் உள்ளதாகவும்,அதேபோல தன் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றம் இதில் தலையிட்டு தனக்கு ஆறுமாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறை துறைக்கும் உத்தரவிடுமாறும் அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராடுத்துவதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் வழக்கு விசாரணையில் மனுதரார் வாதிடுவதை தடுக்க முடியாது. வழக்கில் வாதிட அவர்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்தனர். மேலும் நேரில் ஆஜராகுவதில் என்ன பிரச்சினை உள்ளது பாதுகாப்பு பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து வரும் 18 ஆம் தேதி தமிழக அரசிடம் பதிலை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.